இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்குள் எடுக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு பதில் பொலிஸமா அதிபருக்கு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள சிஐடியை சேர்ந்த ஜனாக மாரசிங்கவை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2019 இல் வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது என ஜனாக மாரசிங்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
2019 ஜனவரி 16 ம் திகதி, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வனாத்தவில்லு பகுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ள அவர் எங்களிற்கு தகவல் வழங்கிய முகமட் தஸ்லீன் என்பவரும் எங்களுடன் வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தஸ்லீன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் எனினும் உயிர்தப்பினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் நானே அடுத்த இலக்கு என்பதை கண்டறிந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஜனவரி 16 ம் திகதி நான்கு சந்தேகநபர்கள் அந்த பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை மராசிங்க பொறுப்பற்ற விதத்தில் தயாரித்த அறிக்கைகள் காரணமாகவே இரண்டு சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படடனர் என்பது குறித்து குற்றச்சாட்டுகளிற்கும் அவர் பதிலளித்துள்ளார்.
மேலதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்,இதன் காரணமாக இரு சந்தேகநபர்கள் குறித்து உடனடியாக விசாரணைகள் இடம்பெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.