web log free
December 23, 2024

சஹ்ரானின் சகாக்களை மைத்திரியே விடுவித்தார்

புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களில் இருவரை விடுதலை செய்வதற்கான அனுமதியை தாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுகொண்டாரென குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜனக்க மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (10) சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசேட அதிரடிபடையின் பிரதம பொலிஸ் பரிசோதகர் ரம்முனி அருண முதலில் சாட்சியமளித்திருந்தார்.

‘வண்ணாத்திவில்லு, லெக்டோவத்த பகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து இராணுவ ஆடைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட மோசகார செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டதாக’ அவர் சாட்சியமளித்தார்.

‘இந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் லெக்டோவத்த காணி உரிமையாளரின் மகனும் உள்ளடங்கியதாக’ – விசேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரியங்கர சாட்சியமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜனக்க மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்துள்ளார்.

‘2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி மாலை 3.05க்கு லெக்டோவத்த காணிக்கு தான் சென்றதாகவும், எமது குழுவுடன் கேகாலை பொலிஸ் வலயத்தின் அழகக்கோன் பொலிஸ் கான்ஸ்டபிள் இருந்தார். அவரைவிட எமக்கு தகவல் அளித்த தஸ்லீமும் எம்முடனேயே இருந்தார்.

நாம் குறித்த தோட்டத்துக்குள் நுழையும்போது அந்த தென்னந் தோப்பில் 200 மீற்றர் தூரத்திலிருந்த வீட்டின் முன்னால் இருவர் இருந்தனர். ஒருவர் முபீஸ். மற்றையவர் நவாஸ். முபீஸின் கையில் அலவாங்கு ஒன்று காணப்பட்டது. நாம் அவர்களை முதலில் கைது செய்தோம். அதன் பின்னர் அவ்வீட்டை நோக்கி தோப்பின் பின் பக்கத்திலிருந்து இருவர் நடந்து வந்தனர். ஒருவர் நப்ரிஸ். மற்றையவர் நவீட். இவர்கள் சகோதரர்கள். இதனையடுத்து அவர்கள் இருவரையும் எமது பொறுப்பில் எடுத்து விசாரித்தோம்.

மறுநாள் வெளித்தோட்டப் பகுதியில் முழுமையான சோதனைகளை முன்னெடுத்த போது அபாயகரமான வெடிபொருட்கள் உட்பட 40 வகையான பொருட்களை நாம் கைப்பற்றினோம். அதில் 12 குழல் துப்பாக்கி, வாயு ரைபிள் உள்ளிட்டவையும் அடங்கும்.

நவீட், நப்ரிஸ் ஆகியோர் அங்கு கைது செய்யப்பட்ட முபீஸின் மனைவியின் சகோதரர்களாவர். அவர்கள் அங்கிருந்த கோழிப் பண்ணையில் சேவைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். நப்ரிஸ் கோழிப் பண்ணையில் வேலை செய்யும் நிலையில், நவீட் அங்கு கைது செய்யப்படும்போதும் இரு தடவைகளே வந்து சென்றுள்ளமை தெரிந்தது. கைது செய்யப்படும்போதும் அவர் நப்ரீஸுக்கு பகல் உணவு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்பட்டது. நப்ரீஸ் எனும் நபரே 5 மாதங்களுக்கு முன்னர், கோழிப் பண்னை அருகே உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் பிளைகளுடன் இருந்துள்ளமையும் தெரிய வந்தது.

இவ்வாறான பின்னணியில் நப்ரிஸ் நபீஸ் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் இல்லாத நிலையிலேயே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் 11/1 ஆம் பிரிவின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிரிசேனவிடம் கோரப்பட்டது. அதன் பின்னரே அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த இருவர் தொடர்பிலும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு எனது மேலதிகாரியான உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் கூறிய நிலையிலேயே அதற்கென சார்ஜன்ட் ஒருவரின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.’ – என்றார்.

இதன்போது, நப்ரீஸ், நவீட் ஆகியோர் இருந்த கோழிப் பண்ணைக்கு அருகே இருந்த வீட்டிலிருந்து அல்லவா 12 குழல் துப்பாக்கியும் வாயு ரைபிளும் மீட்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் அதிரடிப்படை ஒருவர் சாட்சியமளித்தார். அப்படியானால் அவர்களை அது தொடர்பில் மேலதிக விசாரணை செய்யாது விடுவித்தது எப்படி? என ஆணைக் குழு கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த மாரசிங்க,

‘கோழிப் பண்ணை அருகே உள்ள வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டமையைத் தான் ஆணைக்குழுவில் முன்வைத்த சாட்சியத்துக்கு அமையவே அறிந்ததாகவும், அதுவரை அந்தத் துப்பாக்கிகள் லக்டோவத்த தோட்டா நுழைவாயிலில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் இருந்த போதே தன்னால் பரிசீலிக்கப்பட்டது. கோழிப் பன்ணைக்கு அருகே உள்ள வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பின், குறித்த இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் விடுவிக்க ஏதுவாக அறிக்கை சமர்ப்பித்தமை தவறானது என தற்போது தோன்றுகிறது. எனினும் அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக எந்தச் சான்றுகளும் இருக்கவில்லை எனவும்.’ – என்றார்.

இதேவேளை, ‘2019 மார்ச் 12ம் திகதி கையெழுத்திடப்பட்ட இரகசிய அறிக்கை ஒன்றை தான் மாவனெல்லை நீதிவானுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக கூறிய அவர், அதில் வண்ணாத்துவில்லு பயிற்சி முகாம் கண்டறியப்பட்ட பின்னர் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில், 2020ம் ஆண்டு இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இரு குழுக்களாக பிரிந்து அந்தத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்கொலைதாரிகளுக்கு அபு என்ற ஆரம்பத்துடன் புனைப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.’ – என்றும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd