பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக ஒன்பது உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 288 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இவர்கள் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயேச்சைக் குழுக்கள் சார்பாகவும் போட்டியிடவுள்ளனர்.
இவ் அரசியல் கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள் 23 பேரும், சுயேச்சைக் குழுக்களில் தமிழ் வேட்பாளர்கள் 37 பேரும் 60 தமிழ் வேட்பாளர்கள் இருந்துவருகின்றனர். இவர்களில் 15 பேர் தமிழ் பெண் வேட்பாளர்களாவர்.
பதுளை மாவட்டத்தில் மகியங்கனை, வியலுவை பசறை, பதுளை, ஹாலி-எலை, ஊவா–பரனகமை, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
மகியங்கனை– 105150,வியலுவை– 54995,பசறை– 67195,பதுளை– 59353, ஹாலி-எலை– 74785,ஊவா–பரனகமை– 66278,வெலிமடை– 80482,பண்டாரவளை– 89861, ஹப்புத்தளை– 70066 என்ற வகையில் 6, 68, 166 வாக்காளர்களாக மொத்தமாகவுள்ளனர்.
இவர்களில் ஒரு இலட்சத்து இருபத்தாறாயிரம் தமிழ் வாக்காளர்களாகவும், ஐம்பதாயிரத்தை அண்மித்த முஸ்லிம் வாக்காளர்களும் இருந்துவருகின்றனர்.
இத்தமிழ் வாக்காளர் தொகையில் 36 ஆயிரம் வாக்காளர்கள் தொழில் நிமித்தம் வெளி மாகாணங்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்பவர்களையும், வாக்களிக்க விரும்பாத விரக்தியடைந்தவர்களாகவும் அடங்கியுள்ளனர்.
90 ஆயிரம் வாக்காளர்களே வாக்களிப்பவர்களாக இருந்துவருகின்றனர். இவ் வாக்குகளை இலக்குவைத்து,அரசியல் கட்சிகளில் 23 பேரும், சுயேச்சைக் குழுக்களில் 37 பேருமாக 60 தமிழ் வேட்பாளர்கள் இருந்துவருகின்றனர். இவர்களில் 15 பேர் தமிழ்ப் பெண் வேட்பாளர்களாவர்.
களம் இறங்கியிருக்கும் தமிழ் வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அ. அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ்,முன்னாள் ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் ஊவாமாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதத்தின் புதல்வனான வேலாயுதம் பிரதீப்ராஜ் ஆகியோர் முன்னனியிலுள்ளனர்.
கட்சிகளுக்கப்பால், சமூகரீதியில் மூன்று பேரை நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கிடைக்குமாகில், அது பதுளை மாவட்டதமிழ் மக்களின் பெரும் சாதனையேயாகும். அச் சாதனையை ஏற்படுத்தும் வகையில்,தமிழ் வாக்காளர்கள் தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயற்படல் வேண்டும். அரசியல் ரீதியிலான பலம் அதிகரிக்கப்படும் பட்சத்திலேயே, எமது மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளதென்பதை, அனைவரும் உணரவேண்டும்.