ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியளித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய இல்ஹாம் அஹமட் இப்ராஹிமினாலேயே இந்த குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னைய தினம் தெமட்டகொடையிலுள்ள அவரது வீட்டிற்கு வருகைத் தந்த இல்ஹாம் அஹமட் இப்ராஹிம், தாக்குதலை நடத்துவதற்கான காரணங்களை தெளிவூட்டி, குரல் பதிவொன்றை செய்துள்ளார்.
இல்ஹாம் அஹமட்டினால் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு, பென்ரைவ் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனது பெற்றோருக்கு செவிமடுக்க வழங்குமாறு தெரிவித்து மனைவியிடம் கையளித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலாவது குரல் பதிவை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இரவு 11.48ற்கும், இரண்டாவது குரல் பதிவை 21ஆம் திகதி அதிகாலை 12.03ற்கும் ஒலி பதிவு செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த குரல் பதிவு, சிங்கள மொழி பெயர்ப்புடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் துனேஷ் மலித் அயகமகேவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெளிவூட்டப்பட்டது.
”அம்மா, அப்பா, சகோதர் மற்றும் சகோதரி ஆகியோருக்கு வழங்கப்படும் ஒரு தகவல்” என்றே இந்த குரல் பதிவு ஆரம்பிக்கப்படுகின்றது.
நேரம் இல்லைமையினால் அவசரமாக இந்த குரல் பதிவை பதிவு செய்வதாகவும், பல்வேறு விடயங்கள் கதைக்க வேண்டியிருந்தாலும், அதற்கு நேரம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தை மார்க்த்தை பின்பற்றும் விதம், ஏனைய மதங்களுடன் இணைந்து செயற்படுதல், பிக்குகளுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர் குறித்த குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குரல் பதிவு உறவினர்களிடம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தான் இறைவனிடம் சென்றடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஷரியா சட்டம் இலங்கைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் ஏனைய மதத்தவருடன் எவ்வாறு பழக வேண்டும், இஸ்லாம் அல்லாத நாடொன்றில் எவ்வாறு இஸ்லாமியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தற்கொலை கிடையாது எனவும், இதுவொரு தானம் எனவும் இல்ஹாம் அஹமட் தெரிவித்துள்ளார்.
தான் இறைவனிடம் செல்வதற்காகவே, ஏனைய மதத்தவருடன் இணைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி தெளிவூட்டியுள்ளார்.
தான் தனது சகோதரன் இன்ஷாப்புடன் இணைந்து மிக உயரிய செயற்பாடொன்றை முன்னெடுப்பதாகவும், அதனூடாக தான் ”நிபான்” நிலைக்கு செல்வதாகவும் அவர் தனது குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தந்தை மற்றும் தாய் ஆகியோரிடம் இல்ஹாம் அஹமட் குரல் பதிவின் ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தன்னால் தனது பெற்றோருக்கு பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும், குடும்பத்தாருக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும், பெற்றோரை பொலிஸார் கைது செய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜியாத் என்பது இந்த காலத்தில் மிக முக்கியமானது எனவும் இல்ஹாம் அஹமட் தனது குரல் பதிவில் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குரல் பதிவு செய்து, அதனை பென்ரைவ் ஒன்றில் பதிவேற்றம் செய்த இல்ஹாம் அஹமட் , அதனை பெற்றோருக்கு செவிமடுக்க வழி செய்யுமாறு தனது மனைவியிடம் கோரி, அன்றிரவு வேளையிலேயே தனது வீட்டை விட்டு அவர் வெளியேறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னர், தெமட்டகொடையிலுள்ள இல்ஹாம் அஹமட்டின் வீட்டிற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் செல்லும் சந்தர்ப்பத்தில், குடும்பத்தார் அந்த குரல் பதிவை செவிமடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே இல்ஹாம் அஹமட்டின் மனைவி தனது பிள்ளைகளுடன் மேல்மாடியில் குண்டை வெடிக்க செய்து, தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் துனேஷ் மலித் அயகமகே சாட்சியளித்துள்ளார்.