web log free
December 23, 2024

சுனில் கொலை- 8 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை சுய தொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் கொலையுடன் தொடர்புடையதாக கைதான 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று முன்தினம் மாலை மிரிஹான பிரதேசத்திலுள்ள லீசிங் நிறுவனமொன்றிற்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சுனில் ஜயவர்தன, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் 8 பேர் மிரிஹான பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். குத்தகை பணம் செலுத்த தவறிய முச்சக்கர வண்டியொன்று தொடர்பில் ஏற்ப்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக சுனில் ஜயவர்தன லீசிங் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியமை, கொலை செய்ய முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் 8 பேரும் மிரிஹான பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 53 வயதுடைய சுனில் ஜயவர்தன கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd