நாடாளுமன்றத் தேர்தலில், ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளருக்கே, காங்கிரஸின் தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது என கொழும்பு தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகையால், வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் தருவாயில் இன்றேல், மௌன காலத்தில் அறிவிக்கப்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையில், கடுமையான போட்டிகள் இறுதித் தருணத்தில் நிலவக்கூடுமென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தனது பிரதான வேட்பாளர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், நுவரெலியா, பதுளை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் களமிறக்கியுள்ளது. அதுமட்டுமன்றி, இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஓரிரு வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.