பண்டாரவளை, கிரேக் தோட்டத்தில் தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை 24 மணி நேரத்திற்குள் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது அரச அதிகாரிகளும், தோட்ட முகாமையாளரும் அலட்சியமாக இருந்துள்ளனர். எனினும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர், பாதிக்கப்பட்ட வீட்டைப் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், ‘நான் மீண்டும் 24 மணி நேரத்திற்குள் வருவேன். அதற்குள் வேலை முடிந்தாக வேண்டும்” என்று செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். இதனால் உரிய தரப்பினர் உடனடியாக வேலையை ஆரம்பித்து செய்துமுடித்து, குடியிருப்பாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த உடனடி செயலுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வாக்குறுதிகளை வழங்குவதுடன் நின்றுவிடாது உடனடியாக செய்துகொடுப்பதே சிறந்த மக்கள் சேவை என்றும், இதனை செந்தில் தொண்டமான் செய்துகாட்டியுள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை செந்தில் தொண்டமான் உடனடியாக திருத்திக் கொடுப்பது இது முதல்முறையல்ல.
பதுளை மாவட்டத்தில் ஒலியா மண்டி பிரதேசத்தில் 2016ஆம் ஆண்டு 12 வீடுகள் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு குயின்ஸ் டவுன் அலகொல்ல பிரதேசத்தில் 8 வீடுகள் பாதிக்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு நமுனுகொல நகரில் 10 கடைகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டன. இந்த அனைத்தும் ஒரு வாரகாலத்திற்குள் செந்தில் தொண்டமான் புனரமைத்து ஒப்படைத்திருந்தார்.
மலையகத்தின் ஏனைய மாவட்டங்களில் வீடுகளில் தீ விபத்து ஏற்படும்போது பல வருடங்களாக அவை புனரமைக்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளன. எனினும், பதுளை மாவட்டங்களில் இவ்வாறான விபத்துக்கள் நடக்கும்போது செந்தில் தொண்டமான் உடனடியாக செயற்பட்டு, அதற்கான தீர்வுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.