தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவானது சில நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தேர்தல்கள் செயலகத்தில், நேற்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார பிரிவின் பிரதிநிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
பொதுத் தேர்தலுக்கான விருப்பிலக்கம் வழங்கப்பட்டதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இணக்கம் தெரிவித்தாலும் ஏனைய இரண்டு உறுப்பினர்களும் அவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதற்கு கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.
விருப்பு இலக்கம் மற்றும் வேட்பாளரின் படங்களை சட்டரீதியில் காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்கவேண்டும் என்று ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களும் வலியுறுத்தினர் எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கருத்துகளால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.