இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயின் பரம்பல் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் இறப்புக்களும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து இரகசியமாக மீன்பிடிப் படகுகள் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சிலர் இங்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்களால் இலங்கையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
இவ்வாறு எமது நாட்டிற்குள் வருகை தருபவர்களை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் எமது நாட்டில் இந்த நோய் பரவுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும்.
எனவே இவ்வாறு யாராவது இரகசியமான முறையில் இந்தியாவிலிருந்து உங்கள் பிரதேசத்திற்கு புதிதாக வருகை தந்திருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக உங்கள் பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறியத்தரவும்.
அல்லது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு அறியத்தரவும் என கூறினார்