இலங்கையின் பொதுத்தேர்தலுக்கு முழுமையான கண்காணிப்புக்குழுவை அனுப்ப முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுகாதாரம் மற்றும் அமைவிடம் போன்ற பிரச்சினைகளின் அடிப்படையில் தமது முழுமைக் கண்காணிப்புக்குழுவை அனுப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் நிபுணர் அலுவலகத்தின் இரண்டு மூன்று உறுப்பினர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்று ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எனினும் அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஐரோப்பிய ஒன்றியம் 60 பேர் கண்காணிப்புக்குழுவை இலங்கைக்கு அனுப்பியிருந்தது.
இதேவேளை பொதுநலவாய அமைப்பும் இலங்கையின் தேர்தலின்போது கண்காணிப்புக்குழுவை அனுப்பாது. எனினும் ஆசியான் அமைப்பு தாம் குழு ஒன்றை அனுப்புவதாக தெரிவித்துள்ளது.