முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விசேட மேல் நீதிமன்றத்தின் தலைவர் சம்பத் விஜேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழு இதனை இன்று அறிவித்துள்ளது.
மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
விசேட மேல் நீதிமன்றத்துக்கு குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லையெனக் கூறி, கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில், அவரது சட்டத்தரணி ரொமேஸ் டீ சில்வாவினால், கடந்த 22ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஆட்சேபனை மனு தொடர்பான தீர்ப்பை, இன்றைய தினம் (11) வழங்குவதாக, நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.