web log free
January 15, 2026

ரணில்,சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகும்- முத்தையா பிரபாகரன்

சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஹற்றன், புளியாவத்தை நியூட்டன் தோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தளவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு நடக்குமானால் வீட்டுத் திட்டத்தை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். எனவேதான் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவை இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவ்வாறு நடைபெற்றால் நிச்சயம் மாற்றம் வரும்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு மட்டுமல்லாது, மலையக மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அவசியமாக உள்ளது. சுயதொழில் வாய்ப்பு உட்பட மேலும் பல விடயங்கள் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. இரு அணிகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர். எனவே, ஆட்சியைப் பிடித்து இவர்கள் மக்களுக்கு சேவை செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும் என்பதுடன், தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd