web log free
December 24, 2024

சஹ்ரான் இந்தியா சென்றது எப்படி- சாட்சியத்தில் அம்பலம்

காத்தான்குடி பகுதியில், பயங்கரவாதி சஹ்ரானின் கும்பல் தொடர்புபட்ட மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து, நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்து, சஹ்ரான் ஹஷீம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அவ்வாறு படகில் இந்தியாவுக்கு செல்ல அவருக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் உதவியதாகவும் உளவுப் பிரிவொன்றின் முன்னாள் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

 சாட்சியாளரின்  அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற ஆணைக் குழுவின் விஷேட கோரிக்கைக்கு அமைய  குறித்த உளவுத் துறைப் பணிப்பாளரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை )

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அந்த முன்னாள் உளவுத்துறை பணிப்பாளர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக்க டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தப்பத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று அதிகாலை 2.00 மணி வரை அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் விஷேட சாட்சியத்தை வழங்கிய குறித்த உளவுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு,

' நான்  பணியாற்றிய உளவுத்துறை,  முன்னாள் தேசிய புலனாய்வு சேவைத் ( என்.ஐ.எஸ்) தலைவர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ்,   முன்னாள் அரச  புலனாய்வு சேவை பணிப்பாளர்  நிலந்த ஜெயவர்தன ஆகியோருக்கு ஒன்பது சந்தர்ப்பங்களில் சஹ்ரானின் தீவிரவாத உரைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட சஹ்ரானின் உரைகள் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) கருத்துக்களை ஒத்ததாக இருப்பதால், இது தொடர்பாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உளவுத் துறை பிரதானிகளை நான் கேட்டுக்கொண்டேன்.

என்.ஐ.எஸ்.  எனும்  தேசிய புலனாய்வு சேவைக்கு தலைமை தாங்க வேண்டிய நபர் இந்த விஷயத்தில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். எனினும் சிசிர  மெண்டிஸ் அத்தகைய பண்புகளை கொண்டிருக்கவில்லை.

கடந்த 2017 மார்ச் மாதம்  தேசிய தெளஹீத் ஜமாத் தரப்புக்கும்  மற்றொரு தரப்பினருக்கும் இடையே காத்தான்குடியில் மோதலொன்று ஏர்பட்டது. அந்த  மோதலைத் தொடர்ந்து சஹ்ரான் கத்தான்குடி பகுதியில் இருந்து தப்பிச் சென்றார்.

அந்த சம்பவத்தை மையப்படுத்தி சஹ்ரான் உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்தது. அதனால், சஹ்ரான் அவ்வப்போது மாவனெல்லை  மற்றும் குருணாகல் பகுதிகளில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.

“பின்னர், 2018 ஆம் ஆண்டு   சஹ்ரான் மன்னார் வந்து படகு மூலம் இந்தியா சென்றிருந்தார். சஹ்ரான் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து தனக்கு சொந்தமான யூடியூப் சேனல் மூலம் மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

சஹ்ரான் இந்தியாவில் காஷ்மீர்வரை சென்றதாக  அப்போது தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டன. என அந்த உளவுத்துறை முன்னாள் பனிப்பாளர் சாட்சியம் அளித்தார்.

அப்போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சாட்சியியாளரிடம்  இந்தியா செல்ல சஹ்ரானுக்கு யார் உதவி செய்தார்கள் என வினவினர். அதற்கு பதிலளித்த அவர், ரிப்கான் பதியுதீனே சஹ்ரானுக்கு படகு மூலம் இந்தியா செல்ல உதவியதாக கூறினார்.

அத்துடன் . அக்காலப்பகுதியில் ரிப்கான் பதியுதீன் சட்டவிரோதப் பொருட்களை இந்தியாவில் இருந்து நாட்டுக்குள் கொண்டுவருவதாக  அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்ததாகவும் அவர் கூறினார். அவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சகோதரர் எனவும் சாட்சியாளர் வெளிப்படுத்தினார்.

ஏற்கனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சஹ்ரான்  போன்ற ஒருவருக்கு சக்திவாய்ந்த அமைச்சரின் சகோதரர் அளித்த ஆதரவைப் பற்றி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (என்.எஸ்.சி) அறிவித்தீரா என்று  ஆணைக் குழு உறுப்பினர்கள் சாட்சியாளரிடம் மீளவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக  கூறினார். "ஒவ்வொரு செவ்வாயன்றும் நடைபெற்ற உளவுத்துறை கூட்டத்திலும் நான் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தேன்.

 2019 மார்ச் 19  அன்று, இந்த விவகாரம் என்.ஐ.எஸ் தலைவரின் கவனத்திற்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மூலம் கொண்டு வரப்பட்டது, ”என்று சாட்சியாளர்  விளக்கினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூடியதா என்று ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் மீளவும் சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பினர். தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்  சபைக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும்   2019 மார்ச் 20 மற்றும் ஏபரல்  2 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெற்ற உளவுத்துறை மறுஆய்வுக் கூட்டங்களில் இந்த தகவலை தான்  முன்வைத்ததாகவும் சாட்சியாளர் கூறினார். இந்த தகவல்கள் அப்போதைய பாதுகாப்பு செயலளர்  ஹேமசிறி பெர்ணான்டோ முன்னிலையில் தன்னால் முன்வைக்கப்பட்ட போதும், அவர்கள் அது தொடர்பில்  எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் சாட்சியாளர் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன் பயங்கரவாதி சஹ்ரானின் தேசிய தளஹீத் ஜமாத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரித்ததாகவும் அது தொடர்பிலும் தான் என்.ஐ.எஸ். எனும் தேசிய உளவுச் சேவை பிரதனைக்கு 2017 ஆம் ஆண்டே தான் அறிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இதனைவிட, சாட்சியாளர் தனது சாட்சியத்தின் போது, 2019 ஏபரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர், ஏபரல் 11 ஆம் திகதி  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும்  உளவுத் தகவல்கள் குறித்தும் தகவல் சாட்சியமளித்தார்.

 அது குறித்த ஆவணங்களை பரீட்சித்து சாட்சியமளித்த அவர், அது தெளிவான உளவுத் தகவல் எனவும், எனினும் அந்த தகவல்கள் அடங்கிய கோவையின் ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வசனங்கள், முழு தகவலையும் முற்றாக மழுங்கடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd