web log free
December 24, 2024

மனைவியிடம் பொய்- நாலரை கோடி ரூபா வழங்கிய தற்கொலைதாரி

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி  கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் எனும் தற்கொலை குண்டுதாரி, தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் வியாபார நடவடிக்கைகளுக்காக செம்பியா செல்வதாக மனைவியிடம் பொய் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர்,  தற்கொலை தாக்குதல்களுக்கு தயாராகி, தாக்குதல்களை நடாத்தியுள்ளமை தொடர்பில் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக,  குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில்

சாட்சியமளிக்கும் போதே பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அமைக்கப்பட்ட ஐவர் கொண்ட  ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது நேற்று பிற்பகல் 12.45 மணி முதல், மாலை நேரம் வரை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி,  அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க மற்றும்  ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு சாட்சியமளித்தார். அந்த சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு :

“உண்மையில்  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து சி.ஐ.டி.யின் பல்வேறு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்தன. அதன்படி நான் சினமன் கிராண்ட் ஹோட்டலில், தப்ரபேன் உணவகத்தில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரித்தேன். நான் அங்கு சென்று ஆராய்ந்த போது தற்கொலைதாரியின் தலை, உடல் பாகங்கள் சிலவற்றை அடையாளம் கண்டேன். எனினும் தற்கொலைதாரி யார் என அந்த சந்தர்ப்பத்தில் நாம் அறிந்திருக்கவில்லை.

இந் நிலையில் தான் எமது இன்னொரு குழு, ஷெங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்தது. அங்கு ஹோட்டலில் உள் நுழையும் போது, அந்த ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய ஒரு தற்கொலைதாரியான மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் என்பவர் முகவரியொன்றினை கொடுத்திருந்தார். தெமட்டகொட பகுதியை அந்த முகவரி அடையாளம் காட்டியது. அதன்படி அந்த தற்கொலைதாரியின் வீட்டை தேடிச் சென்று நடாத்திய விசாரணையின்  போதே, சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தியவர் ஷெங்ரில்லா குண்டுதாரிகளில்  ஒருவரான  மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டின் சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என தெரியவந்தது.

 அதனை உறுதி செய்ய, அவரது தாய்,  ஜுனைதீன் கதீஜா உம்மா, சகோதரர்களான மொஹமட் இப்ராஹீம் இப்லால் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயில் ஆகியோரின் இரத்த மாதிரிகள் ஊடாக பெறப்பட்ட கூறுகளை வைத்து மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

உண்மையில்,   இன்சாப் அஹமட் எனும் இந்த தற்கொலைதாரி, 2019.04.21 அன்று தாக்குதல் நடாத்தும் தினத்துக்கு முன்னரே சினமன் ஹோட்டலுக்கு சென்று அவதானிப்புக்களை முன்னெடுத்து வருவதை நாம் சி.சி.ரி.வி.காணொளிகள் ஊடாக உறுதி செய்துள்ளோம்.

 அதாவது 2019.04.17 அன்று,  இன்சாப் அஹமட், பிற்பகல் 1.29 மணிக்கு முச்சக்கர வண்டி ஒன்றூடாக, சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு வந்து செல்வது சி.சி.ரி.வி. காணொளிகளில் பதிவாகியுள்ளது. எனினும் அவர் 2019.04.18 ஆம் திகதி என்ன செய்தார் என்ற தகவல்கள் விசாரணையில் வெளிபப்டுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும் 2019.04.19 ஆம் திகதி, அவரது நடவடிக்கை தொடர்பில்,  குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 2019.04.25 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட குண்டுதாரியின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2019.04.19 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் குண்டுதாரியான இன்சாப் அஹமட், தான் வியாபார நடவடிக்கைகளுக்கு செம்பியா செல்வதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.  

அப்போது அவரை வழியனுப்ப , மனைவி பாத்திமா சிப்கா, அவர்களது பிள்ளைகளான மொஹம்மட் ஆகில், பாத்திமா ஆனிகா, அமீனா, அமீரா ஆகியோரும் சென்றுள்ளனர்.

குண்டுதாரிக்கு சொந்தமான டப்ளியூ.பி. சி.ஏ.எஸ். 1411 என்ற வீ 8 ரக  வெள்ளை நிற டொயாடோ ஜீப் வண்டியிலேயே அவர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது ஜீப் வண்டியை  குண்டுதாரியான இன்சாப்பின்  மனைவியின் தந்தையின் சாரதியான ரிம்சான் என்பவரே செலுத்தியுள்ளார்.

 இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சி.சி.ரி.வி.காணொளிகள் ஊடாகவும் சாட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குண்டுதாரி இன்சாபை விமான நிலைய வளாகத்தில் விட்டுவிட்டு, அவரது மனைவி சிப்கா பிள்ளைகளுடன் அதே  ஜீப் வண்டியில் மன்னாரில் உள்ள தனது பிறந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இது குறித்தும் அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இன்சாப் செம்பியா செல்லவில்லை என்பது கடவுச் சீட்டை பரிசோதித்த போது எமது விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம்  அதே தினம், இன்சாப் அஹமட் எனும் அந்த தற்கொலைதாரி,  டப்ளியூ.பி. ஜே.வை 9673 எனும்  வாடகை கெப் வண்டியில், தெமட்டகொடை, மஹவில கார்ட்டன் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

 இன்சாப் அஹமட்டுக்கு  இரு தொலைபேசி இலக்கங்கள் இருந்துள்ளன. 0777363198, 0756644446 எனும் இலக்கங்களே அவை. அவற்றை ஆராய்ந்த போது இன்சாப் அஹமட்டிடம் இருந்து இறுதி அழைப்பு 2019.04.19 ஆம் திகதியே சென்றுள்ளது. அதுவும் அவரது ஊழியர் ஒருவருக்கே அந்த அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்சாபின் மனைவி சிப்காவிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

செம்பியா செல்வதாக கூறி விமான நிலையத்தில் இறங்கிய இன்சாப் அஹமட் அங்கு செல்லாத போதும் குண்டுத் தாக்குதல் வரையிலும் வெளிநாட்டில்  இருப்பதைப் போன்றே, நடந்துகொண்டுள்ளார்.

இன்சாபும் அவரது மனைவியும், மனைவியின் தகப்பனுக்கு சொந்தமான கொழும்பு 3, பிளவர் வீதி வீட்டிலேயே வசித்துவந்துள்ளனர்.  இந் நிலையில் செம்பியா செல்வதாக மனைவியை, மனைவியின் தகப்பனாரான  தங்க நகை வர்த்தகர் அலாவுதீனின்  பூர்வீக  இடமான மன்னாருக்கு அனுப்பி வைத்துள்ள இன்சாப், சம்பியா செல்லாமல் இருந்துள்ளார்.

 எனினும் வட்ஸ் அப் ஊடாக மனைவிக்கு 2019.04.19 முதல் 2019.04.21 காலை 7.30 மணிவரை கதைத்துள்ள தற்கொலைதாரி இன்சாப் அஹமட்,  தான் செம்பியாவில் இருப்பதை போல் காட்டிக்கொள்ள, முதலில் கென்யா வரை சென்று அங்கிருந்து செம்பியா செல்வதாகவும், பின்னர் செம்பியாவில் ஒரு கலந்துரையாடலில்  உள்ளதாகவும் மனைவிக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதியாக 2019.04.21 அன்று காலை,  தான் இரு பென் ட்ரைவ்களை பையில் போட்டுவிட்டுள்ளதாகவும், நேரம் கிடைக்கும் போதும் அதனை பார்க்குமாறும் இன்சாப் அஹமட் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி. 2019.04.25 அன்று மனைவியை கைதுசெய்யும் வரை மனைவி அந்த பென் ட்ரைவ்களை பார்த்திருக்கவில்லை என்பதுடன், அவற்றை அவர் சி.ஐ.டி.க்கு கையளித்தமை ஊடாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் தனது கணவரின்  இந்த அடிப்படைவாத , பயங்கரவாத நடவடிக்கைகளை மனைவி பாத்திமா சிப்கா அறிந்திருக்கவில்லை என்பது இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் இன்சாப் அஹமட்  2019.04.19 அன்று செம்பியா செல்லாமல், தெமட்டகொடைக்கு தாய் வீடு நோக்கிச் சென்ற நிலையில், அங்கிருந்து இரவு 10.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள டைனமோ உணவகத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் தனியாகவே தெஹிவளைக்கு சென்றுள்ள இன்சாப் அஹமட், அங்கிருந்து இதுவரை உறுதி செய்யப்படாத நபருடன் பிக் மீ வாடகை வாகனம் மூலம் பாணந்துறைக்கு சென்றுள்ளார்.  டப்ளியூ.பி. சி.பி.எஸ். 5933 எனும் இளம் பச்சை நிற வெகனார் வாகனத்திலேயே அவர் பாணந்துறைக்கு சென்றுள்ளார்.  

எனினும் அன்றைய தினம் அவர் பாணந்துறையில் உள்ள, பயங்கரவாதிகளின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியேறியதாக எந்த தகவல்களும் இல்லை. எவ்வாறாயினும் 2019.04.20 அன்று  இரவு 7.06 மணிக்கு சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு வந்துள்ள குண்டுதாரியான இன்சாப் அஹமட்  அங்கு 425 ஆம் இலக்க அறையை பதிவு செய்து  சிறிது நேரம் அதில் தங்கியுள்ளார்.

பின்னர்  அன்றைய தினம் இரவு 8.12 மணிக்கு  கல்கிசை , ஸ்பேன் டவர் தொடர்மாடி குடியிருப்புக்கு அவர் சென்றுள்ளார் ( ஸ்பேன் டவர் வீடொன்றில், தற்கொலைதாரிகள் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்தமை தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் சாட்சியாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன .)

இரவு 8.30 மணியாகும் போது ஸ்பேன் டவரை அவர் அடைந்ததாக, அவரை அங்கு கொண்டுபோய் விட்ட சாரதியின் வாக்கு மூலம் ஊடாக  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறுநாள் 2019.04.21 அன்று காலை 7.00 மணியளவிலேயே குண்டுதாரி இன்சாப் அஹமர் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார்.  அவ்வாறு வந்தவர் தான் பதிவு செய்த 425 ஆம் இலக்க அறைக்கு சென்று அங்கிருந்தே தப்ரபேன் உணவக பகுதிக்கு சென்று குண்டினை வெடிக்க செய்துள்ளார்.

 அத்துடன் குண்டுதாரி,  அவரது மனைவிக்கு நேரம் கிடைக்கும் போது பார்க்குமாறு கூறிய பெண் ட்ரவ்களில் இருந்து 4 குரல் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆங்கில, தமிழ் மொழிகளில் அவை உள்ளன. அதன் சிங்கள மொழி பெயர்ப்பை ஆணைக் குழுவுக்கு இன்று சமர்ப்பிக்கின்றோம். ( குறித்த குரல் பதிவுகளின் உள்ளடக்கம் தொடர்பில் பிரத்தியேகமாக பின்னர் அறிக்கையிடவுள்ளோம்).  அவை, குடும்ப உறுப்பினர்களுக்கு, மனைவிக்கு, தனது ஊழியர்களுக்கு, பொது மக்களுக்கு என தனித்தனியாக பேசப்பட்ட குரல் பதிவுகளாகும்.

அதேபோன்று குண்டுதாரியான இன்சாப் அஹமட், இப்ராஹீம் குடும்பத்தில் வர்த்தக ரீதியில் வெற்றிகண்ட ஒருவர். அவருக்கு வெல்லம்பிட்டி பகுதியில் செப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதன் ஊடாக அவர்  இந்தியாவுக்கு, வயர்களை ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.

 அவரது கணக்காளர் மிக நேர்த்தியாக இன்சாப் அஹமட்டின் வருமான செலவுகளை அறிக்கையிட்டிருந்தார். அதனை மையப்படுத்தி, கணக்காளரிடம் நாம் விசாரணை செய்த போது, இன்சாப் அஹமட் எப்போதும் பணத்தை எடுக்கும் போது அதனை என்ன காரணத்துக்காக எடுக்கிறேன் என தெளிவாக குறிப்பிடுவார் எனவும், 2019 இல் அவர் நாலரை கோடி ரூபாவை காரணம் குறிப்பிடாது எடுத்துள்ளதாகவும் கணக்காளர் கூறினார். அது தவிர மற்றைய எல்லா சந்தர்ப்பங்களிலும்  தமது நிறுவனங்களின் கீழான பணத்தை எடுக்கும் போது காரணத்தை இன்சாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார். அந்த நாலரை கோடி பணம் தேசிய தெளஹீத் ஜமாத் செயற்பாடுகளுக்கு வழங்ககப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 பல்வேறு வர்த்தகங்களுக்கு சொந்தக் காரரான இன்சாப் அஹமட்டுக்கு, செப்பு தொழிற்சாலையை வெற்றிகரமாக கொண்டு செல்ல  தொழில் அபிவிருத்தி சபை ஊடாக , உரிய வழிகாட்டல் நியதிகளையும் மீறி உலோக கழிவுகள் வழங்கப்பட்டுள்ளமை எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 2017 இல் தொழில் சபையில் தன்னை பதிவு செய்துள்ள  இன்சாப் அஹமட், ஒரு கட்டத்தில்  செப்பு தொழில் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை ஒன்றின் போது அப்போது, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ரிஷாத் பதியுதீனையும் சந்தித்துள்ளார்.

 2017 இல் தொழில் அபிவிருத்தி சபை ஊடாக 17 வீதமான உலோக கழிவுகளையும் 2018 ஆம் ஆண்டு 35 வீத கழிவுகளையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் அக்காலப்பகுதியில் ஏனைய வர்த்தகர்களுக்கு 0.5 வீதமே அதிகப்படியான  உலோக கழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன. ' என பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி சாட்சியமளித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd