web log free
December 24, 2024

4ஆம் மாடியில் கருணா

கருணா அம்மான் என்றழைக்கப்படு்ம  முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, தொடர்பில் விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து அறிவித்துள்ளது.  

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் முதலாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல,  இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

பத்தரமுல்லையைச் சேர்ந்த  ஹெடில்லே விமலசார எனும் தேரர் பொலிஸ் மா அதிபருக்கு அலித்த முறைப்பாடு, சி.ஐ.டி.க்கு விசாரணைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலேயே தான் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவ்வறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளார்.

 இந் நிலையில், விசாரணைகளுக்காக, அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய ஒளிப் பதிவை சி.ஐ.டி.க்கு வழங்க தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு எதிராக  சி.ஐ.டி. நீதிமன்ற உத்தரவினையும் பெற்றுக்கொண்டுள்ளது. 

அதன்படி குறித்த தனியார் தொலைக்காட்சி ஊடகத்திடம் உள்ள செம்மைபப்டுத்தப்படாத குறித்த சர்ச்சைக்குரிய கருத்து அடங்கிய முழுமையான பதிவை சி.ஐ.டி.க்கு வழங்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே யுத்த காலத்தில் இராணுவத்தினரில் 2000 முதல் 3000  எண்ணிக்கையினரை தான் புலிகள் அமைப்பில் இருக்கும் போது கொலை செய்திருந்ததாக கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள விடயம் தொடர்பில் சி.ஐ.டி. ஆரம்பித்துள்ள குற்றவியல் விசாரணைகளில், இன்று கருணா அம்மானிடம் வாக்கு மூலம் பெறப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

கடந்த மூன்று நாட்களாக கருணா சி.ஐ.டி.யில் ஆஜராகாத நிலையில், நேற்று முன்தினம் தனக்கு சுகயீனம் காரணமாக விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் சுகம் பெற்றதும் வருவதாகவும் சட்டத்தரனி ஊடாக சி.ஐ.டி.க்கு அறிவித்திருந்தார்.

 இந் நிலையிலேயே இன்றைய தினம் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு சென்று கருணா வாக்கு மூலம் வழங்க தயாராகி வருவதாக  தகவல்கள் தெரிவித்தன.

கருணா அம்மான் எனும்  முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தனமை தொடர்பில்  சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 3 தினக்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.   

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுக்கு விடுத்துள்ள விஷேட உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் நேரடி கட்டுப்பாட்ட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்தபயாகலவை பிரதான விசாரணை அதிகாரியாக கொண்டதாக இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையில் சி.ஐ.டி.யின் இரு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பகுதிகளுக்கு நேற்று முன் தினம் சென்று, கருணா அம்மான், குறித்த சர்ச்சைக்குரிய  விடயங்களை வெளிப்படுத்திய நிகழ்வு தொடர்பிலும் அதில் பங்கேற்றவர்கள் தொடர்பிலும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலங்களை பதிவு செய்ய்ய ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd