நீதிமன்ற வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட விளக்கமறியல் கைதி ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய (25) தினம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதியிடம் சாட்சியம் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் தன்னுடைய விளக்கத்தினை தனது சட்டத்தரணி மூலம் அறிவிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார். எனினும் அவரின் சட்டத்தரணி எதனையும் கூறவில்லை.
இந்நிலையில், சந்தேக நபரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது நீதிபதியிடம் சாட்சியம் ஒன்றை வழங்க வேண்டும் என மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு மனுமதி வழங்கப்படாத நிலையில் நீதிமன்றிற்குள் செல்ல முயன்ற சந்தேக நபரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது “நீதிபதியின் கழுத்தை வெட்டிவிட்டு, தானும் கழுத்தை வெட்டிக்கொள்வேன்” என தெரிவித்து சந்தேக நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.