5 வருடங்களாக ஆயிரம் ரூபாய் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” 2015 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்தது. ஆனால், அது இன்னும் சாத்தியப்படவில்லை.
தற்போது 2020 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்தும் ஆயிரம் ரூபா பற்றியே பேசப்படுகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என பிரச்சாரம் செய்கின்றனர். என்று ஆயிரம் ரூபாய் கிடைக்கின்றதோ அன்று சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றோம்.
தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்குமாறு கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் இதற்கு முன்னர் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, 22 கம்பனிகளும் முன்வந்து, வழங்கினால்தான் சாத்தியமாகும்.