நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் மீதும் என்னுடன் இருந்த போராளிகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டார். நான் அவர்களை பாதுகாத்து வீடுகளுக்கு அனுப்பியதைத் துரோகமாகக் கருதினால் என்ன செய்வது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை. நான் தலைவருடன் எவ்விதத்திலும் முரண்பட்டவனும் அல்ல. போராட்டத்தை எனக்கு தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது போனதால் நான் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலகினோம். நான் ஒதுங்கிக் கொண்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாவிதன்வெளியில் நான் கூறியவற்றை சர்ச்சைக்குள்ளாக்கியதை ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவதற்கான நடவடிக்கையாகவே என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும் கட்சியினருக்கும் உள்ள உறவுக்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதியாகக்கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன்.
அரசியல் மேடைகளில் உரையாற்றுவதைப் பெரிதுபடுத்துவது ஓர் ஆரோக்கியமான விடயமாகாது.
கடந்தகாலப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது குற்றங்களைத் திணிக்கின்றனர்.
போர்க்காலத்தில் இழப்புக்கள் இடம்பெறவில்லையா? எல்லாப் பக்கங்களிலும் இழப்புக்கள் ஏற்பட்டமை உண்மை. தொடர்ந்து போர் நடைபெறாமல் எத்தனையோ உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன்.
இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் மக்கள் சமாதானமாக வாழ்கின்றார்கள் என்றால் நான்தான் காரணம். வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் நடமாட்டத்துக்கான பூரண சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் அபிவிருத்தியைக் கட்டியெழுப்பி வளமான நாட்டை உருவாக்குவதற்கு உதவியிருக்கின்றேன். இதனை குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்களுக்கும் சுட்டிக்கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.