“கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு மாதங்களில் சமூக மட்டத்தில் பரவுவது பூச்சியமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு மாதங்களில் சமூக மட்டத்தில் பரவுவது பூச்சியமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படுகின்றது.
இந்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் பின்வரும் மூன்று அறிவுரைகளை பொது மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.
முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பேணுவது மற்றும் சுத்தப்படுத்திக்கொள்ளுவது என மூன்று விடயங்களை பொது மக்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன், பொறுப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கோரியுள்ள ஜனாதிபதி ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.