web log free
May 09, 2025

மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி

“2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூவின மக்களின் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன். இதன் பின்புலத்தில் வெளிநாடுகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ இருக்கவில்லை.”

இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

“2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீட்டாலும், அழுத்தங்களினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது' என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியிருந்தால் படுதோல்வியடைந்திருப்பார்.

அவர் அந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்க்கட்சிகளில் ஒரு கட்சியுமே விரும்பவில்லை. அவரின் தாய் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அவர் போட்டியிடுவதை விரும்பவில்லை. அதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று பொதுவேட்பாளரைத் தேடின.

எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த தீர்மானத்துக்கமைய நான் பொதுவேட்பாளராகக் களமிறங்கினேன். மூவின மக்களின் ஆதரவுடன் வெற்றிவாகை சூடினேன். ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன். இதுதான் நடந்த உண்மை.

நான் ஆட்சிக்கு வந்ததன் பின்புலத்தில் வெளிநாடுகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ இருக்கவில்லை. எந்தச் சதித்தித்திட்டமும் இருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு ஒத்துழைக்காவிட்டாலும் 5 வருடங்கள் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்தேன்.

அந்தக் காலத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத கறைபடிந்த சம்பவமாக இருக்கின்றது.

இதன் பின்னணியில்தான் சதித்திட்டம் இருக்கின்றது. சர்வதேச போதைப்பொருள் வியாபாரிகளும் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்" - என்றார்.

Last modified on Wednesday, 08 July 2020 02:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd