கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஆரம்பமாகியுள்ளதால், தேர்தலை விட வாக்காளர்களின் உயிர்கள் பெறுமதியானது என்பதால், நிலவும் ஆபத்தை கவனத்தில் கொண்டு பொதுத் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவுவது சம்பந்தமாக சுகாதார துறையினரும் அரசாங்கமும் சரியான தகவல்களை நாட்டுக்கு வெளியிடுவதில்லை.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடர்பாக வாக்காளர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதனால், தேர்தல் உரிய தினத்தில் நடந்தாலும் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறையக் கூடும்.
அரச ஊழியர்கள் தமது தபால் வாக்குகளை பயன்படுத்தும் போது இரண்டு முறை சிந்திக்க வேண்டும். அரசாங்கம் அரச ஊழியர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால், அதன் சாதக நிலைமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்துள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆளும் கட்சிக்கு ஒரு சட்டமும், எதிர்க்கட்சிக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளமை தொடர்பாக கடும் விசனத்தில் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த கால தலைவர்கள் தொடர்பாகவும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை குறித்தும் தற்போதைய இளைய தலைமுறையினர் அறியாமல் செயற்படுவதாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.