web log free
December 25, 2024

ராஜபக்சர்கள் எதையும் செய்வார்கள் – ஹரின்

ராஜபக்ஷர்களின் முகத்தில் காணப்படும் எண்ணங்கள் இதயத்தில் இல்லை. தங்களது குடும்ப அதிகார பலத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் எதனையும் செய்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“ஏப்பரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் அரசியல் திட்டமொன்று இருந்தது. அதாவது முஸ்லிம் மக்கள் மீது எச்சரிக்கை ஏற்படுத்துவதும், கத்தோலிக்க மக்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிப்பதுமே. பயங்கரவாதி ஷஹ்ரான் என்ற நபரை அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் சமமாக்க முற்பட்டனர்.

முன்னாள் எம்பி முஜீபுர் ரஹ்மான் போன்றோரே இதற்கு எதிராக முன்னின்று செயற்பட்டு தடுத்தார்கள். இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அது தற்போதைய ஆளும் தரப்பினரது திட்டமாகும்.

எனது பேச்சை துப்பாக்கிச் சூட்டால் மாத்திரமே நிறுத்த முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஹெலிஹொப்படர் மூலம் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். இதன்போது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸாரின் அறிக்கையை காண்பித்து அதில் முதலாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் ஆறு பேர் அவர்களது குடும்பத்தில் களமிறங்கியுள்ளனர். குடும்ப ஆட்சியே இவர்களுக்கு முக்கியம். இவர்களை வீழ்த்தவே கடந்தகாலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் ரணில் – மைத்திரி குழப்பத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.” – என்றார்.

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd