உயிர்த்தஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய குண்டு தாரிகளில் ஒருவனான பயங்கரவாதி மொஹமட் ஹஸ்துனின் மனைவி பயங்கரவாதி சாரா (புலஸ்தினி) 2019 செப்டம்பரில் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மஹின்கந்த சாட்சியமளித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவில் இன்று (21) சாட்சியமளிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும்,
“சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட சாரா, எப்படியாவது அதிலிருந்த தப்பி மறைந்து இருந்திருக்கலாம் என்ற தகவலை கடந்த 6ம் திகதி தகவல் அளிக்கும் பெண் தகவலாளி மூலம் அறிந்து கொண்டேன்.
மட்டக்களப்பு – மாங்காடு பகுதியில் சாரா மறைந்திருந்ததாக தகவல் கிடைத்தது.
இதனால் 8ம் திகதி மங்காடு சென்று விசாரணையை முன்னெடுத்தேன்.
அங்கு ஒருவரை சந்தித்த போது, ‘அவர் சாரா என்று நம்பப்படும் பெண்ணை கண்டதாகவும், 2019 செப்டம்பர் மாதம் ஒருநாளில் அதிகாலை 3 மணியளவில் மாங்காடு பகுதியில் கெப் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்டதாகவும், சாரா என சந்தேகிக்கப்படுகின்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் அதில் ஏறுவதை கண்டதாகவும்’ தெரிவித்தார்.
மேலும் ‘கெப் வாகனத்தின் முன் ஆசனத்தில் பொலிஸ் அதிகாரி நாகூர்தம்பி அபுபக்கர் இருப்பதை கண்டதாகவும்’ தெரிவித்தார்.
பின்னர் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தயாவிற்கு அவர் தப்பி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. சாராவை தப்பிக்க தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாராவின் மாமனாரும், வௌிநாட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் ஒருவரும் உதவியுள்ளனர்.” – என்றார்.