“கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது”
இவ்வாறு இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் அண்மைக்காலமாக கூறு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும்,
“கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவுமில்லை. பலவீனமடையவுமில்லை. இரண்டு வாரங்கள் மட்டுமே கிழக்கை கருணா கைப்பற்றி வைத்திருந்தார். எனினும் கிழக்கை மீட்க உடனடியாக பிரபாகரன் தாக்குதல் அணி ஒன்றை அனுப்பியிருந்தார்.
வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜூவத்தை பகுதியில் கடல் வழியாக வந்த புலிகளின் தாக்குதல் படையணி, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்களை கொன்றது. இந்த தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆயுதங்களைப் போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியிலுள்ள பிள்ளையானின் முகாமில் தஞ்சமடைந்தார்.
நூற்றி ஐம்பது பேர்தான் இறுதியில் எஞ்சினர். அதிலும் பலர் சிறுவர் போராளிகள். அங்கிருந்தும் கொழும்புக்கு கருணா ஓடிவந்தார். அதன்பின்னர் புலிகளின் மற்றொரு தளபதியான ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் புலிகளின் பலத்தை நிலை நிறுத்தினார். எனவே கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை. அவ்வாறு கூறுவது தவறு” – என்றார்.