பணிப்பாளர் ஒருவரின் கையொப்பத்தை, ஆவணங்களில் போலியாக இட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் வேலைவாய்ப்பு விஸா பரிந்துரை ஆவணங்களை வெளிநாட்டவருக்கு வழங்கும் ஆவணத்திலேயே அவர், போலியாக கையொப்பமிட்டுள்ளார். வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு வீசாக்கான பரிந்துரைகளை அவர், போலி கையொப்பமிட்டு வழங்கியுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் நிதிப் பிரிவில் பணியாற்றிய நபரே, இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், ஜூலை 22ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். , “நாம், குடிவரவு திணைக்களத்துடன் மிகவும் நுணுக்கமாகவே பணியாற்றி வந்தோம். ஆனால், சந்தேகத்துக்கிடமான இரண்டு பரிந்துரைக் கடிதம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இந்த போலி கையெடுத்து தொடர்பாக தெரியவந்தது” என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் கிமார்லி பெர்ணாண்டோ தெரிவித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையை இழிவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால், தங்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்றும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால், ஊழியர்களின் சிலர், தலைமையை இழிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் தாங்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மாற்றங்களை செய்துகொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.