IDH வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றமையினால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற இந்த நோயாளி சமூக மட்டத்தில் மக்களுடன் தொடர்புபட்டாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோயாளி கொழும்பில் எந்தெந்த இடங்களுக்கு பயணித்தார். அவர் எந்த நபர்களுடன் பழகினார் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த நபர் மக்களுடன் தொடர்புபட்டிருந்தால் அந்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நோயாளி சமூகத்திற்குள் சுற்றித் திரிந்தமை ஆபத்தானதாகும். இந்நிலையில் கொரோனா அவதானம் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்களை உடனடியாக கண்டுபிடித்து அவர் பழகியவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும்.
இந்த நோயாளியுடன் உரையாடியிருந்தால் உடனடியாக சுகாதார பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைக்காக CCTV காணொளிகளையும் பொலிஸார் தற்போது திரட்டி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.