ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிம் அல்ல நவ்பர் மௌலவியே என்று தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன சாட்சியமளித்துள்ளார்.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று (28) சாட்சியமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“2016ம் ஆண்டில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதக் குழு, ஒரு கலிபாவை நிறுவுவதற்கான தனது திட்டத்தில் இலங்கையை குராசான் மாகாணத்தின் ஒரு பகுதியாகக் கருதியது.
அந்நேரம் இலங்கையில் உள்ள குழு ஒன்று பயங்கரவாதிகளுடன் சேர்ந்திருந்தது. அதில் தெஹிவளை தற்கொலை தாக்குதல் பயங்கரவாதி அப்துல் லதீப் மொஹமட் ஜமீலும் இருந்தான்.
இது தொடர்பில் பாதுகாப்பு சபையிலும் பேசப்பட்டது. குண்டு தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே இப்போதைய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன்.
இதேவேளை, பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய ஷஹ்ரான் ஹசிம் முக்கிய சூத்திரதாரியில்லை.
கட்டாரில் 19 வருடங்களாக வசித்து சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி.” – என்றார்.