கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டம் நேற்று (01) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.