இந்தியாவில் இறந்து விட்டதாக கூறப்படும் இலங்கை பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து உதவிபுரிந்த குற்றச்சாட்டில் இந்தியா – கோயம்புத்தூர் சிட்டி பொலிஸாரால் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லொக்காவுடன் இருந்த கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27-வயது), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36-வயது), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் (32-வயது) ஆகியோரை நேற்று (02) பீலமேடு பொலிஸார் கைது செய்தனர்.
லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றி இந்திய பிரஜையாக ஆதார் அட்டையும் பெற்று தலைமறைவாக இருந்தார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதன்படி அதற்கு உதவிய குறித்த மூவர் மீதும் குற்றவியல் சதி – ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஐபிசியின் 120 பி, 177, 182, 202, 212, 417, 419, 466, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவல்படி, “ஜூலை 4ம் திகதி சந்தேக நபர்களில் ஒருவரான சுந்தரி தனது உறவினரான பிரதீப் சிங் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்து ஆதார் அட்டையின் பிரதியை பீலாமேடு பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.
விசாரணையின் போது ஆதார் அட்டை போலியானது என்றும், மரணமடைந்தது அமானியுடன் சேர் மா நகரில் தங்கியிருந்த லொக்காவுடையது என்பதையும் கண்டறிந்தனர்” – என்று குறித்த ஊடகத் தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
“சந்தேக நபரான அமானியின் தகவல்படி, “அமனியால் நெஞ்சு வலி என தெரிவித்து ஜூலை 3ம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொக்கா மரணமடைந்தார் என்றும், கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி வைத்தியசாயைில் மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் கையளிக்கப்பட்டது என்றும், ஜூலை 4ம் திகதி பிரேத பரிசோதனை நடைமுறையை பூர்த்தி செய்ய சுந்தரி பொலிஸாரை அணுகினார். பின்னர் மதுரையில் இறுதிக்கிரியை இடம்பெற்றது எனவும் தெரியவந்தது.” – எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவரின் உள்ளுறுப்பு மாதிரிகளின் ஆய்வக முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று கோயம்புத்தூர் பிரதி பொலிஸ் ஆணையாளர் ஜி.ஸ்டாலின் தெரிவித்தார்.
லொக்காவை அவருடன் இருந்த பெண் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்தார் என்று அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டமையும், அதனைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.