புதிய நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் தொடர்பான இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி தேசியப் பட்டியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவிக்கப்படும்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்காக தேசிய பட்டியலில் ஏழு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
இதில் 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கும் ஏனைய 3 ஆசனங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கமாறு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் கோரியிருந்ததாகவும் அதற்கு அவர் இணங்கியதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்திருந்தார்.
அத்தோடு, தற்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டிய நிலை ஏற்படுமெனவும் மனோ கணேசன் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.