நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு முன்னாள் எம்.பி திலகர் எந்தவகையில் உதவவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், எனவே அவருக்கு எப்படி தேசிய பட்டியலை வழங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் உள்ள ரமடான் ஹோட்டலில் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் என்னுடையக் கட்சிக்காரர். அவருக்கு தேசிய பட்டியல் வழங்கவேன் என நான் உறுதியளித்திருந்தேன். ஆனால், தேர்தல் காலத்தில் திலகராஜ், என்னுடன் கதைக்கவும் இல்லை. எங்களுக்கு வேலை செய்யவும் இல்லை.
“ஊடகங்களிடமும் முகப்புத்தகத்திலுமே அவர் பேசிக்கொண்டிருந்தார். எனவே, ஊடகங்களிடமும் முகப்புத்தகத்திலும் தேசிய பட்டியலை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் கேட்டிருந்தால் தந்திருப்பேன். எங்களை வெற்றிபெறச் செய்யாதவருக்கு, தேசிய பட்டியலை எவ்வாறு வழங்குவது?” என்றும் இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்றால், அதை எவருக்கு வழங்குவதென, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தீர்மானிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.