ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் நெருக்கடி தீரும் வரையில், தேசியப் பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதை நிறுத்தி வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிப்பதில் தாமதம் ஏற்படும் என அந்த கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக தாம் இருப்பதால், தேசியப் பட்டியலில் முதல் பெயராக தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்கு தான் மிகவும் பொருத்தமானவர் என்றும் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்று ஆரம்பமாகும் ஒன்பதாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் இரண்டு ஆசனங்கள் காலியாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தமானி செய்யப்படவில்லை என பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த இரண்டு கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து வர்த்தமானி செய்யப்படாமையினால் அந்த கட்சிகளின் இரண்டு ஆசனங்களும் முதலாவது அமர்வில் காலியாக வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.