சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு சொந்தமான பாரியளவிலான ஹோட்டலொன்று தொழிற்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்ட உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற, அவமதிக்கும் வகையிலான கருத்து தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகரவிடம் ஏழு நாட்களுக்குள் ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி சம்மன் அனுப்பியுள்ளார்.
சிங்கராஜ வனத்திற்குள் யோஷித ராஜபக்ஷ அவர்களுக்கு சொந்தமான ஹோட்டலொன்று காணப்படுவதாகவும், சிங்கராஜ ஊடாக வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவது, அதனை அண்மித்த வீதியுடன் தொடர்புபடுத்துவதற்கு எனவும் சஜீவ சாமிகர 2020.08.19 இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்தில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென தெரிவித்துள்ள யோஷித ராஜபக்ஷ அவர்கள் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும், இதனால் தனக்கும் தனது நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நட்டஈடாக ரூபாய் 500 மில்லியன் கோரி இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன்,
1. இந்த கருத்தில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என ஒப்புக்கொண்டு தன்னிடம் மன்னிப்பு கோரல்
2. ஊடக நிறுவனங்கள், சமூக வலைத்தளம் மற்றும் இணைய ஊடகங்களில் இந்த உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகியிருப்பின் அதனை அவற்றிலிருந்து நீக்குமாறு உரிய நிறுவனம் அல்லது குறித்த தரப்பினருக்கு விழிப்பூட்டுதல் மற்றும் குறித்த செய்தியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்
3. குறித்த கருத்தில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என ஊடக வெளியீடொன்றின் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்தல்
4. யோஷித ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டேன் என உறுதியளித்தல்
5. ஏழு தினங்களுக்குள் 50 கோடி ரூபாயை நட்டஈடாக பெற்றுக் கொடுத்தல்
ஆகிய விடயங்களை உள்ளடக்கிய சம்மன் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று 2020.08.24 சுற்றுச்சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.