web log free
May 10, 2025

90 நாட்களுக்கு 74 கோடி கேட்கிறது அரசு

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட உள்ளமையினால் மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை உருவாக்க அமைச்சரவையின் கன்னி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இதற்கான நடவடிக்கை கடந்த ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையின் முழு செலவினம் ஆயிரத்து 747.68 பில்லியன் ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசசேவைகள் மற்றும் , மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு 194.38 பில்லியன் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பாதுகாப்பு அமைச்சுக்கு 174.09 பில்லியனும் உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள அரசமுறை கடன்களை செலுத்த 778.39 பில்லியனும் இடைக்கால கணக்கறிக்கைக்கு ஒதுக்கியுள்ள நிதியை திரட்டிக்கொள்ள 1300 பில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட நிலையில் இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 28ஆம் திகதியன்று இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டோ அல்லது வாக்கெடுப்பு இன்றியோ நிறைவேற்றிக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd