web log free
May 10, 2025

சி.வியை வெளியேற்ற சஜித் கோரிக்கை-மஹிந்த மறுத்தார்

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களென தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில் கண்டனம் தெரிவித்ததோடு அவரை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போடவேண்டுமெனவும் கோரினர். 

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட எம்.பி. மனுஷ நாணயக்கார ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். ''பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் விக்கினேஸ்வரன் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் என்று கூறினார். எனவே அந்தக் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்'' என்று அவர் கோரினார்.

ஆனால் இது ஒழுங்குப்பிரச்சினையல்ல. எந்தவொரு உறுப்பினருக்கும் தனது கருத்தை வெளியிட உரிமையுள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் பலரும் மாறி மாறி ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினர்.

நளின் பண்டார எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் '' நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்படமாட்டேன். பிரிவினைக்கு, பயங்கரவாதத்துக்கு ஒத்துழைக்கமாட்டேன் என பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்தினுள்ளேயே சி.வி. அதனை மீறி விட்டார். எனவே அவரை உடனடியாக சபையிலிருந்து தூக்கி வெளியே போட வேண்டும் என்றார்.

எனினும், பாராளுமன்றத்தில் கருத்து கூறுவதற்கு எவருக்கு உரிமை உண்டு. அதனால், அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd