பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உணவுக்கு 3,000 ரூபா செலவிடப்படுவதாக பாராளுமன்ற நிதிப்பிரிவு வெளியிட்ட தகவல் தொடர்பில் சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், விரைவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு உணவுக்காக எவ்வளவு செலவிடப்படுகிறதென கணக்கிட்டு அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரசதரப்பு எம்.பி.யான பிரேம்நாத் தொடவத்த ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உணவுக்கு 3,000 ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தவறான கருத்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அருகிலிருப்பவர்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டுவர முடியும். ஆனால் தூர இடங்களிலிருப்பவர்கள் அப்படிக் கொண்டுவர முடியாது. எனவே இது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான மரிக்காரும் நேற்றும் நேற்று முன்தினமும் ஊடகங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உணவுக்கு 3,000 ரூபா செலவிடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கு ஹில்டன், ஷங்கரில்லா ஹோட்டல் உணவுகள் வழங்கப்படவில்லை சோறும் கறியும் தான் வழங்கப்படுகின்றன. அவற்றின் தரமும் பிரச்சினையாகவுள்ளது. பழ வகைகளில் கூட வாழைப்பழமும் அன்னாசிப்பழ மும் மட்டுமே தினமும் வைக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் சபாநாயகர் சபையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில்,
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உணவுக்கு 3,000 ரூபா செலவு என்பது தவறு. பாராளுமன்ற ஊழியர்கள் அத்தனை பேருக்குமான உணவுச் செலவை 225 பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரித்தே இத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான சரியான தொகையை வெளியிடுவோம் ஊடகங்களும் நன்றாக ஆராய்ந்து செய்திகளை வெளியிட வேண்டும். பாராளுமன்றத்தில் சாப்பிடாத உறுப்பினர்கள் பலரும் உள்ளனர் என்றார்.