வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் நிலையில் வெளிநாடுகளுக்குத் தப்பித்துள்ள அவர்கள், கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பித்து வருக்கிறார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக இந்த 14 பேர் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால் 14 சந்தேகநபர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாது எனவும் அவர்களை விரைவில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைவர்களுக்குச் சொந்தமான, மேல் மாகாணத்தில் உள்ள சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான 900 பேர்ச்சஸ் காணியை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உரித்தான 12 சொகுசு கார்கள், 7 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைவிட, சந்தேகநபர்களின் 102 வங்கிக் கணக்குகளிலிருந்த 960 இலட்சம் ரூபாய் பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளது.
மேலும், பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட 1917 என்ற சிறப்பு ஹொற்லைன் மூலமாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.