ஐக்கிய தேசியக்கட்சி இன்று 6 ஆம் திகதி 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது.
இதற்காக சிறிகொத்தவில் சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
1994 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக ஐ.தே.கவின் தலைவராக செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின்கீழ்தான் 75ஆவது ஆண்டிலும் அக்கட்சி காலடிவைக்கின்றது.
எனினும், இம்முறை தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படுவது உறுதியென ஐ.தே.க. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது 1947 முதல் 2020 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் 8 இல் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.
அத்துடன், 8 ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றில் வெற்றிவாகை சூடியுள்ளது.
எனினும், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வரலாறுகாணாத பின்னடைவு ஏற்பட்டது.
வாக்களிப்புமூலம் ஒரு உறுப்பினர்கூட தெரிவாகவில்லை. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.
அந்த ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.