அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசியலமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்புகின்றோம். இதில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இதில் இந்தியா தலையிடுவதால் எந்தப் பயனும் இல்லை.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை தொடர 13ஆவது திருத்தமும் ஒரு காரணமாக இருக்கின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசியலமைப்பில் முடிவு காணப்படும்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடே. அதன்பின்னர் வரவுள்ள புதிய அரசியவமைப்பு ஆபத்தான திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
எனவே, புதிய அரசியலமைப்பில் இந்தியா விரும்பும் 13ஆவது திருத்தத்தின் பரிந்துரைகளை உட்புகுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.