சாய்ந்தமருது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை, மீண்டும் ஆராய்ந்து மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், நேற்றைய தினம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, அவரின் தாயாரை இன்றைய தினம் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிற்கு அழைத்து சென்று, மரபணு பரிசோதனையைப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த கால விசாரணைகளில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, மரபணுபரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராய்ந்து மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.