மிளகாய் தூள் வீசித் தாக்குதல் நடத்தியமை, சபையின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை, சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட சபைக்குள் குழப்பகரமாக நடந்துகொண்டமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 59 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மேற்படி சம்பவங்கள் தொடர்பில், ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை பரிந்துரைகளுடன், சபைக்கு இன்று (22) சமர்ப்பித்தது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 54 பேருக்கு எதிராகவே, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ன.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் நால்வருக்கு எதிராகவும், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விமல் வீரவன்சவுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளும், பத்ம உதயசாந்த குணசேகர, பிரியங்கர ஜயரத்ன, இந்திக்க அனுருத்த, ஆனந்த அலுத்கமகே ஆகியோருக்கு எதிராக தலா 9 குற்றச்சாட்டுகளும், எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகளும், மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.