வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனிஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ்பெற தயார் என, டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் , க.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என கூறி, சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.
எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக அப்போது அரசியல் வட்டாரங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இருந்தது.
அத்துடன் பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர், பாராளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக பேரினவாதிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.
அதோடு இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர். இவ்வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
இந்தநிலையில், விக்னேஸ்வரனை இக்கட்டில் சிக்க வைக்கும்- தமிழ் தரப்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ துணையாகி விட வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே டெனீஸ்வரன் இந்த முடிவிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த வழக்கு தவணையில், இரு தரப்பும் நீதிமன்றத்தின் வெளியே இணக்கமாக பேசி தீர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக மன்றில் தெரிவிப்பார்கள் என தெரிய வருகிறது.
எனினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது நீதியரசர்களின் முடிவில் தான் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.