யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இந்த அழைப்பை விடுத்திருக்கின்றது.
கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்லமுற்பட்ட போது உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் இயற்கையான மரணம் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தலையீட்டின் பிரகாரம் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.