முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவசரமான அழைப்பு ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவைவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்த இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்துப் பேசியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் இணைந்து மைத்தரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 16ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஆனாலும் சமீபகாலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவிகூட வழங்கப்படவில்லை. அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் மைத்திபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் அதிருப்தியடைந்துள்ள மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர், அதிகாரப்பரவலாக்கத்துக்கான 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் பேசியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
13ஆவது திருத்தச் சட்டமூலத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார். அத்துடன் ஒன்பது மாகாண சபைகளின் எண்ணிக்கையை மூன்றாகக் குறைக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை இந்தியத் தூதுவர் அறிந்து கொண்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக இந்தியத் தூதரகமோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ இதுவரை அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்குக் கருத்துக் கூறவில்லை.
1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.