காலி - ரத்கம - ரத்னஉதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் அவை மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் அக்மீமன - கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவருடைய சடலங்கள் வலஸ்முல்ல - மெதகம்கொட - கனுமுல்தெனிய வனப்பகுதியில் எரியூட்டப்பட்டுள்ளதாகவும், வர்த்தகர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பொலிஸ் சீருடையில் வந்த சிலர் 31 வயதான ரசீன் சித்தக மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல ஆகிய வர்த்தகர்களை கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து, கடத்தப்பட்ட மஞ்சுள அசேலவின் மனைவிக்கு மாத்தறை - நுபே பொலிஸ் நிலையத்தில் இருந்து அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்க பெற்றுள்ளது.
அதில், தென்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீ விஜேகுணவர்த்தனவின் காரியாலயத்தில் உள்ள விஷேட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த உள்ளிட்ட தரப்பினரே கடத்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர் குற்றத்தடுப்பு திணைக்கள அதிகாரிகளால் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த கைது செய்யப்பட்டதுடன் அவர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தென் மாகாண விஷேட குற்றத்தடுப்ப பிரிவின் பொறுப்பதிகாரி சமன் ரோஹன மற்றும் அதன் மேலும் சில அதிகாரிகளிடம் அண்மைய சில நாட்களாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.
இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தென் மாகாண விஷேட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் மதுசங்க நேற்று முன்தினம் கைது செய்ய்பபட்டார்.
இந்தநிலையில் அவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.
இதேவேளை, குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அக்மீமன - கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் ரவீ விஜேகுணவர்த்தன கடந்த 17 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டார்.
அத்துடன், 25 பேரை கொண்ட தென் மாகாண விஷேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 15 பேர் மேல் மாகாணத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.