மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் அதே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் புதுமண தம்பதியினர் மணிகண்டன்(35) மற்றும் ராதிகா (29). இருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் வேலை காரணமாக இருவரும் சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவில் தனியாக வீடு ஒன்றை எடுத்து வசித்து வந்துள்ளனர்.
ராதிகா கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராகவும், மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் குவாலிட்டி மேனேஜராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே மணிகண்டனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் அதிகரித்த நிலையில் ராதிகா கடந்த 15 நாட்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பின்பு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உடல் நலம் தேறி உள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அலுவலகத்திற்கு சென்ற மணிகண்டன் தனது மனைவிக்கு பலமுறை போன் செய்தும் அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் தனது அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து தனது மனைவியிடம் கூறி தனது தொலைபேசி அழைப்பை எடுத்து பேசும்படி கூறுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ராதிகா அங்கே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்த நிலையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
தனது புது மனைவி தற்கொலை செய்துகொண்ட விரக்தி மற்றும் கடும் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத போது தனது மனைவி ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறி மற்றும் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அசோக்நகர் பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த பத்து மாதத்தில் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.