முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போது ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நாடுதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழில்சார் வெளிநாட்டு சேவை பணியாளராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்ன கடந்த ஜுன் மாதத்தில் தனது 60வது வயதைப் பூர்த்திசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுச் சேவையினூடாக தொழில்சார் ரீதியில் இராஜதந்திரிகளாக பணியாற்றிவருபவர்களை 60வயதுடன் ஓய்வுபெறுமாறு வெளிநாட்டு அமைச்சு வலியுறுத்திவரும் போதும் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் இராஜதந்திரிகளாக பணியாற்றுகின்றவர்கள் 60வயதைக் கடந்தும் பணியாற்றுவதுடன் புதிதாக நியமனங்களையும் பெற்றுவருவது சுட்டிக்காட்டத்தக்கது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தூதரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ள எட்டு பிரமுகர்கள் 18பேரைக் கொண்ட உயர் பதவிகளுக்கான குழுவின் முன்பாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவை அண்மையில் சபாநாயகர் நியமித்திருந்தார். இந்தக்குழு வெளிநாட்டுத்தூதுவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டவர்களின் தகைமைகளை விபரமாக ஆராய்ந்து அவர்கள் பொருத்தமானவரா? இல்லையா ? என்பதைத் தீர்மானிக்கும்.
இந்த எட்டுப் பிரமுகர்களின் பெயர்கள் பட்டியலில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்னதாக இடம்பெறவில்லை. அவரது பெயர் பின்னரே பரிந்துரைக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.
அந்தவகையில் முதலில் பரிந்துரைக்கப்பட்ட எட்டுப்பேரின் விபரங்கள் பின்வருமாறு : அட்மிரல் ( ஓய்வுபெற்ற) கே.கே.வி.பி. ஹரிஸ்சந்திர (ஆப்கானிஸ்தான்), விஸ்ராமல் சஞ்சீவ் குணசேகர (ஜப்பான்) ,மிலிந்த மொரகொட ( இந்தியா), பாலித கோகண ( சீனா) ,ரவிநாத ஆரியசிங்க ( அமெரிக்கா), பேராசிரியர் சேனிகா ஹிரும்புரேகம ( பிரான்ஸ்)