முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த அனைவரும் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நடவடிக்கை இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை வெளியிட்டமை தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரில் அவரது பிரத்தியேக செயலாளரினால் கடந்த 20 ஆம் திகதி ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேராயர் முன்னதாகவே அறிந்திருந்ததாக, தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தின் மூன்று ஆயர்களினால் கடந்த 20ஆம் திகதி ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.