தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
திலீபனை நினைவுகூரும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்டவர்களினால்; விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் ஆராய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு மேலதிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோரையும் எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.