உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் திகதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார்.
பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது.
மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து கடுமையாக சேதப்படுத்தி விட்டனர்.
அந்த பெண். அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்துவிட்டன. கைகள் பாதியளவு முடங்கி விட்டன.
நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. அவரை காப்பாற்ற முடியவில்லை,’ என்றனர்.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஒட்டுமொத்த தேசத்தின் ஆன்மாக்களை உலுக்கிய இந்த கொடூர சம்பவம், 2012ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்ததை நினைவுக் கூர்ந்துள்ளது.
டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதே போன்று ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கின் குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என்பதை ஒட்டுமொத்த தேச மக்களின் கோரிக்கையாக எழுந்து உள்ளது.